Breaking News
Home / தமிழகம் / திருப்பத்தூர் அருகே கடன் வட்டி கொடுமையால் தேங்காய் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் – கடனை திரும்ப கேட்டு மிரட்டல் விடுப்பவர்கள் தொல்லை
Theedhum nandrum

திருப்பத்தூர் அருகே கடன் வட்டி கொடுமையால் தேங்காய் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் – கடனை திரும்ப கேட்டு மிரட்டல் விடுப்பவர்கள் தொல்லை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே கந்துவட்டி கொடுமையால் தேங்காய் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி சடலத்தை வாங்காமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மருத்துவமனை அருகே பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு ஜொள்ளகவுண்டனூர் பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் ஏழுமலை(32). இவர் திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் உள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், ஏழுமலை தேங்காய்களை பறித்து குஜராத், கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று மற்றும் மழைக்காலங்களில் வியாபாரம் நலிவடைந்து வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால், வியாபாரத்திற்காக ஏழுமலை அருகே உள்ள இருணாப்பட்டு பகுதியை சேர்ந்த முருகன், சேட்டு, சாமுடி, அனுமுத்து, மணி என்கிற தேவராஜ், சீனன் உள்ளிட்ட 17 நபர்களிடம் சுமார் ₹3.50 கோடி வரை கடனாக பெற்றுள்ளார். அவர்களுக்கு கந்துவட்டியாக வட்டியும் கொடுத்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவலால் வருமானம் இழந்த ஏழுமலையால் வட்டி கட்ட முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் பணம் கொடுத்த கந்துவட்டி கும்பல் ஏழுமலையிடம் பணத்தை திருப்பி தரும்படி டார்ச்சர் செய்து கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து ஏழுமலை கடந்த 20ம் தேதி தனக்கு கடன் கொடுத்தவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஏழுமலையின் புகார் மீது காவல்துறையினர் கவனம் செலுத்த முடியவில்லை என தெரிகிறது.

தொடர்ந்து, கடன் கொடுத்தவர்கள் ஏழுமலைக்கு தொலைபேசியில் அழைத்து மனைவி மற்றும் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஏழுமலை நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவலறிந்து வந்த குரிசிலாப்பட்டு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், நேற்று காலை பிரேத பரிசோதனை முடிந்து சடலத்தை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைக்க வந்தனர். அப்போது, உறவினர்கள் புகார் அளித்தும் கடன் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு உயிர் போயிருக்காது என ஆதங்கப்பட்டு ஏழுமலையின் உடலை வாங்க மறுத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், தகவலறிந்து வந்த திருப்பத்தூர் டவுன் போலீசார், உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பேரில் சமரசம் அடைந்த உறவினர்கள் சடலத்தை வாங்கிச் சென்றனர். இச்சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் சுமார் ஒரு மணி நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

குழந்தை முகத்தை பார்க்காமல் இறந்த தந்தை

தற்கொலை செய்து கொண்ட ஏழுமலையின் மனைவிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் ஏழுமலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுபோன்று சம்பவங்கள் பல இடத்தில் தினமும் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடன் கொடுத்தவர்கள் வாங்கிய நபரை மிரட்டுவது வீட்டிற்கு ஆட்களுடன் சென்று தகாத வார்த்தைகளை கொண்டு திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்து குடும்பத்தினரை அசிங்கப்படுத்துவது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கின்றது. இதனால் பல தற்கொலைகள் நடக்கின்றன பல குடும்பங்கள் அழிந்துவிடுகின்றன. கடன் கொடுத்தவர்கள் வாங்கிய நபர் கட்ட தவறும் பட்சத்தில் முறையாக வழக்கு தொடர்ந்தால் கடன் வாங்கிய நபர் அதனை செலுத்த சட்டம் வழிமுறைகள் ஏற்படுத்தி தரும். இதனால் பல தற்கொலைகள் தடுக்கப்படும்.  எனவே அரசாங்கமும் காவல்துறையினரும் இது போன்று கடன் கொடுத்துவிட்டு அதனை வாங்க மிரட்டி சட்ட விரோதமாக செயல்படுபவர்களை தன்டித்தால் தற்கொலைகள் தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

XSREAL

About Rajesh D

D.Rajesh.,நிறுவனர் & ஆசிரியர்.. அன்னை தமிழ் ஊடகம்,.தீதும் நன்றும்., நேர்கொண்ட பார்வை., Cell :- 6380974716,7010439391.

Check Also

கிரிப்டோகரன்சி விளம்பரத்தால் தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி முடக்கம்!

தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி உள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster