புதுமைகள் படைக்கும் கணித ஆசிரியர்
எழில் கொஞ்சும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படும் வால்பாறையில் உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் கா.வசந்தகுமார்.
கணிதம் என்றாலே மிரட்சி கொள்வோம். ஆனால் அதில் புதுமைகளை புகுத்தி புரட்சி செய்பவர். கணித கருத்துக்களை வசைப்பாடி கற்பிக்காமல் இசை பாடி கற்பித்து கசக்கும் கணிதத்தையும் இனிக்கும் கலைத்தேனாய் கற்பிப்பதில் வல்லவர். ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி என்பதற்கேற்ப அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுபவர். மரபுக் கவிதையிலிருந்து மாறி புதுக்கவிதை புனைந்து ஹைக்கூ வரை இலக்கணம் வளர்த்தாலும் கணித இலக்கம் கசந்த இலக்கணமாய் தான் மாணவர்கள் மத்தியில் இருந்து வந்துள்ளது. அதனை மாற்றி கடினமான கணிதத்தையும் எளிய வகையில் மாணவர்களிடம் கொண்டு சென்றவர்.
கொரோனா காலத்திலும் மாணவர்களிடம் புலன வழிக் கல்வி மூலம் புதுமைகளை புகுத்தி வந்துள்ளார். இணைய வழி கல்வி முலம் கணிதத்தை இசைக்க வைத்துள்ளார்.
தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது பிற மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் தனது வலைப்பூவில் கணித கருத்துக்களை கவிபாடியுள்ளார்.
கற்றலில் புதுமைகளை புகுத்தி துணைக்கருவிகள் மூலம் விளையாட்டு முறையில் கற்பித்து மாணவர்களின் கணித ஏடுகளை கரும்பு சாராய் மாற்றியுள்ளார்.
புத்தகங்களை புத்தாக்கம் செய்யும் புதுமையான ஆசிரியராய் தன் பணியினை சிறப்பாக செய்து வருகிறார்.
“நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் என்றால் உங்களிடம் கல்விக்கற்ற மாணவர்களில் எத்தனை பேர் மருத்துவர், பொறியாளர், ஐஏஎஸ் ஆனார்கள் என்பதல்ல வெற்றி. எத்தனைபேர் உங்களை பார்த்து ஆசிரியர் பணி செய்ய முடிவு செய்தார்கள் என்பதே வெற்றி” என்ற வாக்கிக்கிணங்க தன்னிடம் கல்வி கற்றவர்களை தன்னைப் போல் உயர்த்திய இவருக்கு இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் சமூக சீர்திருத்தவாதியும், சிறந்த கவிஞரும், மருத்துவராகவும், ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும் கல்விக்காகவும் பாடுப்பட்டவருமான மதிப்பிற்குரிய சாவித்திரி பாய் பூலே அவர்களது பெயரில் நதிகள் அறக்கட்டளை மற்றும் தாய்மொழி அறக்கட்டளையின் சார்பில் 07.02.2021 அன்று நெல்லை அரசு மருத்துவமனை முதுநிலை மருத்துவர் அவர்களும், திரைப்பட இயக்குநர் M.K.T மாறன் அவர்களும், நெல்லை லயன்ஸ் கிளப் திருமலை முருகன் அவர்களும் இணைந்து விருது வழங்கி சிறப்பித்தார்கள். இஃது இவரது 50 ஆவது விருதாகும். இவரது பொன்னான கணித கருத்துக்கள் மாணவர்கள் மனதில் பொக்கிஷம் போல் புதைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உணர்வுப்பூர்வமான உண்மையாகும்.